குரோட்டன் அழகி

Thursday, May 26, 2011

Open publication - Free publishing - More book
Posted by டீன்கபூர் at 4:59 AM No comments:
Home
Subscribe to: Posts (Atom)
**
பழமையும் புதுமையும் மிளிரும் கவிதைத் தொகுதி.

அழகாகவும், சுத்தமாகவும் முனைப்பு வெளியீடாக அர்த்தபுஷ்டியான அட்டைப்படத்துடன் வெளிவந்திருக்கிறது. இந்த 64 பக்கப் புத்தகத்தில் 32 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவை 1988 முதல் 1993 வரை இலங்கைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் ஏற்கனவே பிரசுரமானவை.

மனதைக் கவரும் வரிகள் சிலவற்றை டீன்கபூர் எழுதியிருக்கின்றார். சிலமாதிரிகள் ;

அந்த இளமை நினைவுகள்
மின்னுகின்ற பொழுதெல்லாம்
முதுமையினை முட்டிக்கொள்ளும்,

ஒல்லிக்கேணி ஓரங்களில்
உயர்ந்த பனைகள்,

மேட்டுவட்டைக் காணியில்
மோப்பமிடும் குருவிகள்,

பெருமழையில் நனைந்து
கோடிப்பக்கமாய் வந்து நிற்கும்
கோழி மாதிரி,

நெருப்புத் தணல்
கொட்டினால்;போல் உடம்பு,

பாதைகளை எல்லாம்
படுகுழியும் தண்ணீரும்
உரிமை கொண்டாடும்,

கழுவாத குசினிபோல,

தளிரை முகர்ந்து போகும்
மெலிந்த காற்று மட்டும்,

வறண்டு போய்க் கிடக்கும் பூமி
வாய் திறந்திருக்கும்
மழை நீர் குடிக்க,

பாலரைக் கண்டு
கந்துகள் சவளும்,

செருப்பு சுரியைத் தின்னும்
என்றதனால்,

புன்சிரிப்பாய் நிற்கும் மரம்,

கடல் நீரில்
கால் பதித்து வரும் காற்று,

வெயில் உமிழ்கிறாய்,

அரிசி கழுவிய நீரைப் போல.

இவ்வாறு சில பிரயோகங்களை டீன்கபூர் தருகிறார்.

'க்ளாசிக்கல' எனப்படும் செந்நெறிக் கவிதைக்கு எதிர் வினையாக, இங்கிலாந்துக் கவிஞர்கள் சிலர் 19ஆம் நூற்றாண்டிலே இயற்கையையொட்டிய கவிதைகளை எழுதிவந்தனர். அவர்களை 'ரொமான்டிக்' கவிஞர்கள் என்று விமர்சகர்கள் அழைத்தனர். அவர்களிற் சிலர் உவில்லியம் உவேர்ட்ஸ்வர்த், பேர்ஸி பீ ஷெலி, ஜோண் கீட்ஸ், எஸ்.டி. கோலிரிட்ஸ், உவிலியம் ப்ளேக் ஆகியோராவர். அந்த ரொமான்டிக் கவிஞர்களை தமிழில் 'மனோரதியக்' கவிஞர்கள் எனலாம்.

டீன்கபூரின் கவிதைகள் சில மனோரதியப் பாங்கில் அமைந்துள்ளன.

விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன்
இலங்கை வானொலியின் வான் பல்கலைக் கழகம்
வீரகேசரி வாரவெளியீடு.
1984
இளமை நினைவுகள்

பெருமழையில் நனைந்து
கோடிப்பக்கமாய் வந்துநிற்கும் கோழி மாதிரி
கொடிகிக்போய் நிற்கிறது.
நீ அம்மமுண்டியாய்
வாய்க்குள் அவலும் தேங்காயுமாய் நிற்பதனால்தான். (பக்-12)

இக்கவிதை டீன்கபூரினது குரோட்டன் அழகி தொகுப்புக்கென 1988ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள் பல வானம்பாடி இலக்கியக் குழுவின் தாக்கத்திற்குட்பட்டு, பன்னீர்ப் புஷ்பங்கள், அக்கினி நதி போன்ற வார்த்தை விளையாட்டுக்களை கொண்டதாகவே வெளிவந்தன. டீன்கபூரைப் போன்று ஒரு சில கவிஞர்களே உயிரோட்டமாக உண்மை யதார்த்தத்தில் சோடனையற்று எழுதினார்கள்.

ஈழத்தில் 90 களின் தொடக்ககாலம் வலியும் வேதனையும் உச்சமடையத் தொடங்கிய காலம். போரும் அவலமும் சூழ்ந்து தேசம் சல்லடையாக மாறிய போது கவிஞர்கள் பாடு பொருட்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தமது சூழலே பாடு பொருளாக மாறி இருந்தது. துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும், சுற்றிவளைப்புக்களும் நிறைந்த சூன்ய வாழ்வு கவிஞர்கள் உள்ளிட்ட எல்லோரையும் வெகுவாகப் பாதித்தது.

அவ்வாறான சூழலினால் அதிகம் பாதிக்கப்படாத தன் கிராமத்தின் கரைகள் தான் டீன்கபூரின் கவிதை உலகம். குருவிகள், பிராணிகள், பால்ய நினைவுகள், அடைமழை இரவு, மரங்கள், சிறுசுகளின் விளையாட்டுக்கள், காற்று என குறித்த எல்லைக்குள் விரியும் கருப்பொருட்களைக் கொண்டதாகவே கவிதைகள் தீட்டப்பட்டுள்ளன.

இத்தகைய மட்டுப்பாடான எல்லைக்குள் அவர் பாடுபொருட்களை அமைத்துக் கொண்டாலும் அவை வெற்றுப் புனைவுகளாக அல்லாமல், யதார்த்தத்தைத் தழுவியவை. அவற்றின் ஒரு சிலவற்றில் போரும் தலைகாட்டவே செய்கிறது.

இளமை முறுக்கேறி
ஊர் சுற்றிவரும் பருவத்தில்
அடுத்த ஊர் அலறிமரச் சந்திக்கு
அடுத்தாப் போல் உள்ள முடக்குத் தெருவில்
அதிரடியின் பதிலடியில் அகப்பட்டு. (பக்-15)

...................யாரோ செய்த தவறுக்காய்
தெருவோரமாய் போவோர் வருவோர்
ஏன்? என்னினதும் தலையைக் கொத்தி
காயப்படுத்தும் காகம். (பக்-24)

என் தோட்டத்தில் சோளம் கொறிக்க வந்த
கிளிகளில் ஒன்றை மடக்கிப்பிடித்து
கூண்டுக்குள் அடைத்து பேசப்பழக்குகிறேன்.
ஆனாலும் தன் விடுதலைக்காய்
தவித்துக்கொண்டிருக்கிறது கிளி. (பக்;-24)

கறை படிந்திருக்கும் தெருவைக்
கழுவிப் போகையில்
அவ்விடத்தில் நாளையும் ஒரு கொலை
விழக்கூடும். (பக்;-30)

மனிதன்
மண்ணை மயானப்படுத்தும் மனிதன்
மல்லிகைப்பூவின் மணத்தை ருசிக்கிறான்.
அதன் இதயத்தைத் தேடிப்பார்க்கிறான். (பக்-54)

கவிதைகளைச் சும்மா அலங்கரித்து அழகுபடுத்த அவர் விரும்பவில்லை. தனது வட்டார வழக்கு மொழிகளினூடாகவே நகர்த்தி, சகமனிதர்களின் லேசான வாசிப்புக்குட்படுத்துகிறார். பாவனை இல்லாத பழகிய சொற்களே மக்களைச் சென்றடையும் என்ற மன நிறைவில் எழுதப்பட்ட கவிதைகளே அதிகம்.

ஒரு நல்ல மரம்.
குவாடம் தெரியாத விருட்ஷம்
புன்சிரிப்பாய் நிற்கும் மரம். (பக்-45)

அலைகடல் நடுவே அடங்கி வாழும்
மீன் கூட்டத்தை செம்படவர் பாடி அழைப்பர்.
ஓடிலேய்.... ஏலா........ ஏலா......
ஏலேலா....... ஏலோலோவடி....... (பக்-07)

மண்டி இழுத்து மல்லுக்கட்டி, கமத்துக் காட்டிற்குள், பெரியடம்பர் காக்கா, சவளும், ஓதப்பள்ளி, தங்கச்சும்மா, ஒத்தாப்பு, அலுக்குலுத்து, கிரந்தி. கோசுவே வம்மி, குவாடம் போன்றன கவிதைகளில் கையாப்பட்டிருக்கும் பிரதேச வழக்குச் சொற்கள்.

இச் சொற்களின் பாவனை காரணமாக அவர் சோலைக்கிளியின் தாக்கத்திற்கு உட்பட்டு எழுதுகிறார் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. சோலைக்கிளிக்கும், டீன்கபூருக்கும் இடையிலான பிரிகோட்டை சரியாக புரிந்துகொள்ளதவர்களும், கவிதைகளை ஆழமாக வாசிக்காதவர்களும் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தனர். சோலைக்கிளி அஃறிணைப் பொருட்களை உருவகப்படுத்தி, படிமங்களினூடாக எழுதியுள்ளார். டீன்கபூர் உருவகங்களோ, படிமச் செறிவுகளோ அதிகமின்றி எளிய மற்றும் வழக்கு மொழிகளைக் கோர்த்து கவிதைகளை நிகழ்த்திவிட்டிருக்கிறார். இதுவே அவருக்கான தனித்துவம். சோலைக்கிளிக்கும், டீன்கபூருக்கும் இடையிலான வித்தியாசம்.

இத்தகைய சொற்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சில கவிதைகள் வெறும் காட்சிப்படுத்தல்களும், வர்ணனைகளும் விரவி வாசக ஈர்ப்பை குறைத்துவிடும் தன்மையினை கொண்டுள்ளன. இது அவர் கவிதைகளின் பலவீனம்; என்றுகூட குறிப்பிடலாம்.

இத்தொகுப்பில் தென்னையின் காகம், 12 நவம்பர் 92, குரோட்டன் அழகி, அந்த டாவுள் மரம், ஒட்டிக்கிழங்குக்காரி, கள்ளமழையும் சூரியனும் போன்ற தேர்ந்த சிறப்பான கவிதைகள் தொகுப்பில் காணப்படுகின்றன. இவை கவிஞரின் தனித்தன்மையினை வெளிக்காட்டி நிற்கின்றன.

மொத்தத்தில் டீன்கபூரின் கவிதைகளில் எரிமலைக் குமுறல்களோ, வன்முறைக்கு எதிரான வாள் நீட்டல்களோ இல்லை. இமை நோகாமல் பார்க்கின்ற பெண்ணின் பார்வை போல இயற்கையை அதன் வனப்பை இன்னும் பலதை தனது கவித்துவ கண்களினூடாக காண்கிறார், லயிக்கிறார்.
- அலறி -

Total Pageviews

Awesome Inc. theme. Powered by Blogger.